பெ.நா.பாளையம்:சின்ன தடாகத்தில், புதிய போலீஸ் ஸ்டேஷனுக்கான கட்டுமான பணி வேகம் பெற்றுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சட்டம், ஒழுங்கு பராமரிக்கவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், சின்னதடாகத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரத்தில் வாடகை கட்டடத்தில், கடந்த, 2018 பிப்., முதல், தடாகம் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட துவங்கியது.சின்னத்தடாகத்தில், புதிய போலீஸ் ஸ்டேஷனுக்காக சொந்த கட்டடம் விரைவில் கட்டப்படும் என, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக, 84 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில், காவலர் வீட்டுவசதி வாரியம் சார்பில், 88 லட்சம் மதிப்பில், 2,500 சதுரடியில், இரண்டு தளங்கள் கொண்ட போலீஸ் ஸ்டேஷனுக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஜூன் மாதம் நடந்தது.புதிய போலீஸ் ஸ்டேஷனுக்கான கட்டுமான பணிகள், எட்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. கட்டுமான பணிகள் கடந்த ஆக., 2ம் தேதி துவங்கியது. தற்போது, தரைதளம் மற்றும் முதல் தளம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,களுக்கான அறைகள், கம்ப்யூட்டர் அறை, ஆண், பெண் போலீசாருக்காக தனித்தனி அறைகள், விசாரணை கைதிகளை அடைத்து வைக்கும் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.அறைகளுக்கான கதவு, ஜன்னல்கள், சிமெண்ட் பூச்சு வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும் மூன்று மாதத்தில் பணிகள் முழுமையாக முடிந்து, தடாகம் போலீஸ் ஸ்டேஷன், புதிய கட்டடத்தில் செயல்பட தொடங்கும் என, கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் நபர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE