சூலுார்:சாலை விபத்தில், சின்னக்குயிலி பகுதியை சேர்ந்த ஒருவர் பலியானார். விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்யக்கோரி, சடலத்தை அடக்கம் செய்ய மறுத்து, மக்கள் போராட்டம் நடத்தினர்.சூலுார் அடுத்த சின்னக்குயிலி பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி, 67. இவர், நேற்று முன்தினம் காலை, இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் செல்வராஜூடன், ஒண்டிப்புதுார் சென்று விட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.பாப்பம்பட்டி சாலையில், பீடம் பள்ளி பிரிவு அருகே, அவ்வழியே வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதில், தண்டபாணி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த செல்வராஜ், சிங்காநல்லுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக, சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.மக்கள் ஆவேசம்விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, விபத்து ஏற்படுத்தியது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் என அறிந்த உறவினர்கள், அதுகுறித்து ஆதாரத்துடன் போலீசாரிடம் முறையிட்டனர். ஆனால், போலீசார் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சடலத்தை அடக்கம் செய்யாமல், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யக்கோரி, நேற்று சின்னக்குயிலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்தை ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால், மூன்று மணி நேரமாக நடத்திய போராட்டத்தை கைவிட்டு, சடலத்தை அடக்கம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE