அன்னுார்:வளர்ச்சி திட்டம் தயாரிப்பதில் புறக்கணிக்கப்படுவதாக ஒன்றிய கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ராஜன் உள்ளிட்டோர் கூறியதாவது:வரும் நிதியாண்டில், ஊராட்சியில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், ஊராட்சிக்கு என்ன தேவை என்பதை, 28 துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி, கணக்கெடுக்க வேண்டும் என்று, ஊரக வளர்ச்சி துறை தெரிவித்துள்ளது.
இந்த கணக்கெடுப்புக்கு, ஊராட்சி தலைவர் தலைமையில், ஊராட்சி செயலர், வார்டு உறுப்பினர்கள் இருவர், சமூக ஆர்வலர் என, ஒன்பது பேரை தேர்வு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டடவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியும் தருகின்றனர். சாதாரண வார்டு உறுப்பினருக்கு கூட வளர்ச்சி திட்டம் தயாரிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால் 5,000 வாக்குகள் அடங்கிய வார்டில், வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், இந்த திட்டமிடல் குழுவில் சேர்க்கப்படவில்லை; பயிற்சிக்கு அழைக்கப்படவில்லை. எந்த ஊராட்சியிலும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஒன்றிய அதிகாரிகளும் தெரிவிக்கவில்லை.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய கவுன்சிலர்களை அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். ஊராட்சியின் வளர்ச்சி திட்டம் தயாரிப்பதில், ஒன்றிய கவுன்சிலர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, ராஜன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE