உடுமலை:கூட்டு முயற்சியால் வெற்றிகளை குவித்துள்ள, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், ஆறாவது திட்டத்திலும், இலக்கை மிஞ்சிய சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ல் துவக்கப்பட்டது. வெற்றி அமைப்பு, தொழில் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அயராத முயற்சி, சரியான திட்டமிடல், ஒருங்கிணைந்த பசுமைப்பணி மேற்கொண்டதால், 10 லட்சத்தை தாண்டி, 'மெகா' சாதனை படைத்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில், எட்டு லட்சம் மரங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 'வனத்துக்குள் திருப்பூர்-6' திட்டம், 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் துவங்கியது.மாவட்டம்தோறும் பசுமை ஆர்வலர்களின் ஆர்வம், விவசாயிகளின் ஒத்துழைப்பு ஆகிய காரணங்களினால்,இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, இலக்கை மிஞ்சி சாதனை புரிந்துள்ளது. நடப்பாண்டு, உடுமலை பகுதிகளிலும் இத்திட்டத்தில் மரக்கன்று நடும் பணி துவங்கிய நிலையில், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளுடன், பணி தீவிரமாக நடந்து வருகிறது.விவசாயம் செய்ய முடியாமல் வீணாக உள்ள நிலங்கள், மலையடிவார பகுதிகள், கோழிப்பண்ணைகள், தொழிற்சாலைகள் என, 55க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நேற்று, மானுப்பட்டி, டிக்சிதா கோழிப்பண்ணை வளாகத்தை சுற்றிலும், பசுமை மற்றும் இயற்கை சூழலை உருவாக்கும் வகையில், வேம்பு, இலுப்பை, புன்னை என, 677 மரக்கன்றுகள் நடப்பட்டன.மேலும், மானுப்பட்டியிலுள்ள ரகுபதிக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தில், மகாகனி மரச்சோலை உருவாகும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.மற்றொரு நிகழ்ச்சியில், துங்காவியிலுள்ள விவசாயி கருப்புச்சாமி தோட்டத்தில், தேக்கு, பலா, புன்னை, இலுப்பை மரக்கன்றுகள் நடப்பட்டன.இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விருப்பம் உள்ள விவசாயிகள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE