தொழிற்சாலையை பராமரிக்கும் சமயத்தில், மின் விபத்து, கீழே விழுந்து படுகாயம் உட்பட விபத்துகளால் தொழிலாளர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழக்கின்றனர். கடந்த அக்., மாதம் குறு, சிறு தொழில் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி கோவையில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.விஞ்ஞான யுகத்தில் மின்சாரம் இன்றி இயந்திரம், தொழிற்சாலைகள் இயங்க முடியாது. வேலையை சுலபப்படுத்தும் நவீன கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருந்தாலும், செயல்முறை சார்ந்த விஷயங்களில் கவனமுடன் பணியாற்றுவது அவசியமாகிறது.
இல்லையேல், விலை மதிக்கமுடியாத உயிர் இழப்பை சந்திக்கிறது. ஒரு நிறுவனத்துக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை தரலாம். ஆனால், ஒரு குடும்பத்தை வழிநடத்தும் தலைவர்களின் தடம் மறைவது வேதனை அதிகரிக்கும் விஷயம்.இதுபோன்ற விபத்துகளை கட்டுப்படுத்த, தொழிலாளர்கள், நிர்வாகம் மற்றும் அரசு ஆகிய மூன்றும் ஒத்துழைப்பு அளித்து, ஒன்றிணைந்து முடிச்சுபோல் செயல்பட்டால் மட்டுமே, விபத்துகளை தவிர்க்க முடியும் என்கின்றனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினர்.இதுகுறித்து, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் அருள் கூறியதாவது:மின்சாரம், அது கடத்தப்படும் ஊடகம் ஆகிய இரண்டுக்கும் இடையே திரைச் சுமை அமைத்தால் பாதுகாப்பாக இருக்கலாம். மின்சாரம் பாயும் போது உடலில் தீ காயம் ஏற்படுவதுடன், பொருட்கள் எரிந்து நாசமாவது போன்ற விபத்துகள் நடக்கின்றன.தொழிலாளர்கள்களுக்கு பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டும். அதற்கு தொழிற்சாலை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின் 'ஒயரிங்' வெளியே தெரியாமல், குழாய், 'டேப்' கொண்டு பாதுகாப்பாக அமைப்பது அவசியம்.
அனைத்து உபகரணங்களுக்கும், 'எர்த்திங்' இருந்தால் நமக்கு மின்சாரம் பாயாது. மேலும், 'எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்' தொழிற்சாலை முழுவதும் பயன்படுத்தினால், மின்சாரம் தாக்கினாலும் தானாகவே துண்டிக்கப்பட்டு விட்டு பாதிப்பு தவிர்க்கப்படும்.அவசரகால செயல்நிலை திட்டம் வகுப்பதுடன், முன்மாதிரி ஒத்திகை (மாக் டிரில்) ஆண்டுக்கு இரு முறை செய்துபார்க்க வேண்டும். குறிப்பாக, மின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலுதவி மிக அவசியம். எனவே, முதலுதவியாளர்கள் நியமிக்கப்படுவது நல்லது. தொழிலாளர், நிர்வாகம், அரசு ஆகிய மூன்றும் ஒருசேர பொறுப்புடன் நடந்துகொண்டால் விபத்தை தவிர்க்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE