திருவள்ளூர்; காக்களூர் ஏரிக்கு வரும் மழை நீர், கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, பலத்த மழை பெய்தும், தண்ணீர் வராததால், ஏரி நிரம்பவில்லை.திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது, காக்களூர் ஏரி. திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சிக்கு நடுவில், இந்த ஏரி உள்ளது.கிட்டத்தட்ட, 200 ஏக்கர் பரப்பு கொண்டது இந்த ஏரி. கடந்த, 20 ஆண்டு களுக்கு முன், இந்த ஏரியை நம்பி, 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயம் நடந்து வந்தது.நகருக்கு அருகில் அமைந்துள்ளதால், காக்க ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் அதிகரித்து விட்டன.இதனால், விவசாய நிலங்கள் அனைத்தும், வீட்டு மனைகளாக மாறிவிட்டன. தற்போது, காக்க ளூர் ஏரியும், ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது.இந்த ஏரிக்கு வந்த வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விட்டன. இதன் காரணமாக, இந்த ஏரி, மழைக் காலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் முழுதும் நிரம்புவதில்லை.ஏரி நிரம்பினால், உபரி நீர் வெளியேறும் வகையில், இரண்டு இடங்களில், மதகு அமைக்கப்பட்டு உள்ளது. 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் மதகு சேதமடைந்தது. தற்போது வரை, இந்த மதகு சீரமைக்கப்படாமல் உள்ளது.ஏரிக்கு, திருவள்ளூர், பெரியகுப்பம் மற்றும் டோல்கேட் பகுதியில் இருந்து வரும், கால்வாய் துார்ந்து, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால், ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்தும், காக்களூர் ஏரி நிரம்பவில்லை.இதனால், வழக்கம் போல், வரும் ஆண்டிலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.எனவே, பொதுப்பணி துறையினர், ஏரிக்கு வரும் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, தண்ணீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE