செங்குன்றம்; செங்குன்றம் பஸ் நிலையத்தில், அடாவடி ஆட்டோ ஓட்டுனர்களால், பஸ் பயணியர் கடும் அவதிஅடைந்து வருகின்றனர்.சென்னை, செங்குன்றம் பஸ் நிலையத்தில் இருந்து, தினமும், 150க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் மாநகர பஸ்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படுகின்றன.இந்த நிலையில், பஸ் நிலையம் மற்றும் ஜி.என்.டி., சாலையை ஆக்கிரமித்து, 70க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. சில ஆட்டோக்களில், கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.இதனால், பிற மாவட்டங்களுக்கு செல்லும், அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்களை குறித்த நேரத்தில் அங்கிருந்து நகர்த்த முடியாமல், ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.ஆட்டோக்களின் ஆக்கிரமிப்பால், பஸ் நிலையம் முதல் நெல் மார்க்கெட் மற்றும் திருவள்ளூர் கூட்டுச்சாலை வரையில், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவையும், இந்த நெரிசலில் சிக்கி திணறுகின்றன.மேலும், பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய பஸ்சில் ஏறவோ, இறங்கவோ முடியாமல், விபத்தில் சிக்கும் அவலநிலையில் உள்ளனர்.அங்கு ரோந்து பணியில் உள்ள செங்குன்றம் போலீசாரும், ஆட்டோக்களின் அட்டகாசத்தை கண்டுகொள்வதில்லை.இதனால், 'பிக் பாக்கெட்' மற்றும் மொபைல் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இவற்றை தவிர்க்க, பஸ் நிலைய ஆக்கிரமிப்பு ஆட்டோக்களின் அட்டகாசத்தை அடக்கி, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE