சென்னை: சென்னையில், 'ஹெல்மெட்' அணியாமல் வரும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, 'பெட்ரோல்' இல்லை என்ற உத்தரவு, அமலுக்கு வந்தது.தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில், 52 சதவீதம் பேர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதால், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறுவோரிடம், போக்குவரத்து போலீசார், 100 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டி இருந்தால், 1,000 ரூபாய் கட்ட வேண்டும்.தற்போது, பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிகின்றனர். ஆனால், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரிடம், அந்த பழக்கம் இல்லை.இந்நிலையில், சென்னையில் உள்ள, அனைத்து பெட்ரோல் 'பங்க்'களிலும், ஹெல்மெட் அணியாமல் வரும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாக, 'நோ ஹெல்மெட்; நோ பெட்ரோல்' என, அறிவிப்பு பலகை வைக்க, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், நவ., 28ல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து துணை கமிஷனர்கள், பெட்ரோல், 'பங்க்' உரிமையாளர்களிடம், கட்டாயம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்த வேண்டும்.அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட பின், அதை, படம் எடுத்து, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என, தெரிவித்து இருந்தார்.அதன்படி, சென்னையில் உள்ள, 500க்கும் மேற்பட்ட, பெட்ரோல், 'பங்க்'களில், நோ ஹெல்மெட்; நோ பெட்ரோல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'நோ ஹெல்மெட்; நோ பெட்ரோல் அறிவிப்பு பலகை வைப்பதற்கான உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 'பங்க்' உரிமையாளர்கள், அறிவிப்பு பலகை வைப்பதுடன் கடமை முடிந்துவிட்டதாக கருதக் கூடாது. 'போலீசாரின் உத்தரவை நடைமுறைப்படுத்தி, உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE