கஞ்சா கடத்தியவருக்கு 'கம்பி!'மாதவரம்: மாத்துார் சந்திப்பில், மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம், நெல்லுாரைச் சேர்ந்த ஹேமந்த், 26, என்பவரின், இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர்.அதில், பழைய துணி மூட்டைக்குள், 13 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு, 60 ஆயிரம் ரூபாய். அவரையும், கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் அவரது மொபைல் போனை, மாதவரம் பால்பண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைதுஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்த பச்சையம்மாள், 72. நவ., 14ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார். அங்கு சென்ற மர்மநபர், தன் மொபைல் போனுக்கு சார்ஜ் போட வேண்டும். சில நிமிடம், மின் இணைப்பை பயன்படுத்திக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். அதற்கு, மூதாட்டி மறுத்திருக்கிறார்.இதனால், ஆத்திரமடைந்த மர்மநபர், மூதாட்டியை தாக்கி, அவரது, செயின், கம்மல் என, 5 சவரன் நகையை பறித்து சென்றார். இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக, நேற்று முன்தினம், திருநின்றவூரைச் சேர்ந்த விக்னேஷ் ரியாஸ், 19, என்பவரை, கைது செய்து, 5 சவரன் நகையை, பறிமுதல் செய்தனர்.பெண் விஷமருந்தி தற்கொலைஆவடி: ஆவடி, புதுநகரைச் சேந்தவர் அன்சாரி, 45. இவரது மனைவி ரஹீமா நிஷா, 40. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கணவருடனும் பிரச்னை ஏற்பட்டது. இதனால், விரக்தியடைந்த ரஹீமா, கடந்த, 2ம் தேதி, வீட்டில் இருந்த அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். இது குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைதுதி.நகர்: மாம்பலம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, சரோஜினி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த விடுதியில், ஆய்வு மேற்கொண்டனர். இதில், 19 பேர் கும்பல், சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அன்சாரி, 50, கவுதம், 63, உள்ளிட்ட, 19 பேரை கைது செய்த போலீசார், 1.36 லட்சம் ரூபாயை, பறிமுதல் செய்தனர்.வாலிபருக்கு சரமாரி வெட்டுசெங்குன்றம்: லட்சுமிபுரம், நுாக்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ், 30. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் சதீஷ்குமார், 30. என்பவருடன், பம்மதுகுளம் அடுத்த ஈஸ்வரன் நகர், வண்டலுார் - மீஞ்சூர் புறவழிச்சாலை சந்திப்பில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.அங்கிருந்த, ஐந்து பேர், திடீரென சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். அதை கண்ட நரேஷ், சதீஷ்குமாரை மீட்க முயன்றார். அப்போது, அவர்களில் ஒருவர், தன்னிடம் இருந்த கத்தியால், நரேஷை வெட்டினார். இதில் அவருக்கு, தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE