சென்னை - மழை நீர் கால்வாயில், இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து, தனியார் மருத்துவக் கல்லுாரி பேராசிரியை, மகளுடன் பலியான விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம் கலெக்டர் பதிலளிக்க, மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வழக்கு பதிவுசென்னை, அம்பத்துாரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர், தனியார் மருத்துவக் கல்லுாரி போரசிரியை, கரோலின் பிரசில்லா.இவர், தன் மகள் இவாலினுடன், சென்னை புறவழிச்சாலையில், இருசக்கர வாகனத்தில், பல்பொருள் அங்காடிக்கு சென்றார்.நொளம்பூர் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் சென்றபோது, நிலைதடுமாறி மழை நீர் கால்வாயில் விழுந்து, இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சென்னை மாநகராட்சி கமிஷனர், காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.மாற்றுத்திறனாளி பெண்அதேபோல், காஞ்சி புரம், ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, 24; மாற்றுத்திறனாளி. இவர், களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அரசு அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.இதற்கிடையே, புதிதாக கட்டி வரும் வீட்டில் உள்ள கழிப்பறையை, மாற்றுத்திறனாளியான சரண்யா பயன்படுத்தியப்போது, அங்கு மூடப்படாமல் இருந்த கழிப்பறை தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.அரசு அலுவலகமான வேளாண் துறை அலுவலகத்தில், கழிப்பறை வசதி இல்லாததே, சரண்யாவின் மரணத்திற்கு காரணம் என, பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய உறுப்பினர், சித்தரஞ்சன் மோகன்தாஸ், வேளாண் துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'இந்த சம்பவம் குறித்து, மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE