ஆத்தூர்: ஆத்தூர் ஒன்றிய கவுன்சிலர் அவசர கூட்டம், நேற்று நடந்தது. அ.தி.மு.க., சேர்மன் லிங்கம்மாள் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நடந்த, விவாதம் வருமாறு:
ரவிச்சந்திரன் (அ.தி.மு.க.,) கவுன்சிலர்: ஈச்சம்பட்டி கிராமத்தில், 30க்கும் மேற்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீடுகளில், மூன்று வீடுகளுக்கு மேல், மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. விபரீதம் ஏற்படுவதற்குள் ஆய்வு செய்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். பருவ மழையில் பயிர் சேதம் ஆய்வு செய்து, தாமதமின்றி மாவட்ட கலெக்டருக்கு, வேளாண் மற்றும் வருவாய்த்துறையினர் அறிக்கை வழங்க வேண்டும்.
பி.டி.ஓ., (கிராம ஊராட்சிகள்) அருள்பாரதி: தொகுப்பு வீடுகள் ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் சேதம் குறித்து, வேளாண் துறையினர் ஆய்வு செய்வதற்கு அறிவுறுத்தப்படும்.
பன்னீர் செல்வம் (அ.தி.மு.க.,): கொத்தாம்பாடி, அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் படிக்கும், 100 மாணவ, மாணவியருக்கு கழிப்பிட வசதியில்லை.
பி.டி.ஓ., (வட்டார வளர்ச்சி) சந்திரசேகர்: தொடக்கப்பள்ளிக்கு, கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., கவுன்சிலர்கள் பத்மினிபிரியதர்ஷினி, சேகர், கயல்விழி, பரமேஸ்வரி: ஒன்றிய பொது நிதி, 69 லட்சம் ரூபாயில், அ.தி.மு.க., கவுன்சிலருக்கு, நான்கு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், தி.மு.க.,வுக்கு, மூன்று லட்சம் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளீர்கள். தி.மு.க., கவுன்சிலருக்கு மட்டும், ஏன் நிதி குறைத்துள்ளீர்கள்; விரைவில் காலம் மாறும்.
சேர்மன் லிங்கம்மாள்: குறைவாக நிதி உள்ளதால், அடுத்த முறை அனைத்து கவுன்சிலர்களுக்கும், அடிப்படை பணிகள் மேற்கொள்வதற்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE