கிருஷ்ணகிரி: ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச், 25 முதல், ஓசூர் உழவர் சந்தை மூடப்பட்டது. இதனால், 600க்கும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். விளை பொருட்களை விற்க முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினர். மேலும், அரசு அனுமதித்த இடங்களில் முழுமையாக வியாபாரம் செய்ய முடியவில்லை. பொருட்களுக்கு சரியான பாதுகாப்பு மற்றும் சரியான விலையும் கிடைப்பதில்லை. கழிவறை வசதிகளோ, வீணாகும் பொருட்களை கொட்டுவதற்கோ இடம் இல்லாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பொருளாதார நஷ்டத்தால், கடும் பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தற்போது, அனைத்து நிறுவனங்கள், வியாபார அமைப்புகள் மற்றும் போக்குவரத்தை இயக்க அரசு அனுமதித்துள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் கூட செயல்பட ஆரம்பித்துள்ளது. எனவே, ஓசூர் உழவர் சந்தையை திறக்க வழிசெய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE