சேலம்: ''தமிழகத்தில், டிச.,27ல் நடக்கவுள்ள ஸ்டிரைக்குக்கு தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு, ஆதரவு தெரிவிக்கிறது,'' என, பொதுச்செயலாளர் சண்முகப்பா, சேலத்தில் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: லாரிகளில் பயன்படுத்தப்படும் வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஸ்டிக்கர், ஜி.பி.எஸ்., கருவிகளை குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பைதான் பொருத்த வேண்டும் என, போக்குவரத்து துறை நிர்பந்தித்து வருகிறது. இது தொடர்பாக, உயர்நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை, மாநில அரசு செயல்படுத்த மறுத்து வருகிறது. வேகக்கட்டுப்பாட்டு கருவி, 1,500 ரூபாய்க்கு விற்கும் நிலையில், அரசு பரிந்துரை நிறுவனங்கள், 7,000 ரூபாய் வரை விற்கின்றன. விபத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர், 600 ரூபாயாக விற்கும் நிலையில், அரசு பரிந்துரை நிறுவனங்கள் அவற்றை, 6,000 ரூபாய்க்கு விற்கின்றன. ஜி.பி.எஸ்., கருவின் அதிகபட்ச விலை, 3,000 ரூபாயாக உள்ள நிலையில், 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளி மாநிலங்களில், லாரிகளுக்கு நான்கு மணி நேரத்துக்குள் தகுதி சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில், நான்கு நாட்கள் ஆகிறது. கடந்த ஐந்தாண்டில், தமிழகத்தில் வாகன பதிவை மேற்கொள்ள வேண்டிய உரிமையாளர்கள், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு படையெடுப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தை விட, கர்நாடகாவில் டீசல் விலையில் லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைவு என்பதால், தமிழக வாகனங்கள் அங்கு டீசல் நிரப்புவதால், அரசுக்கு, 1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது போல், லாரிகளை தன் வசப்படுத்த விரும்பினால், நாங்கள் ஒப்படைக்க தயாராக உள்ளோம். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 27 காலை, 6:00 மணி முதல், நடத்தப்பட உள்ள காலவரையற்ற ஸ்டிரைக்குக்கு, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. 100 சதவீத லாரிகள் நிறுத்தப்படும். இந்த பிரச்னையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு, ஊழல்களை தடுத்து நிறுத்தி, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தனராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE