ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, பூக்கள் ஏற்றி வந்த ஜீப் மோதியதில், போலீஸ்காரர் பலியானார். வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த ரங்கம்பேட்டையை சேர்ந்தவர், அய்யனமூர்த்தி, 28; இவர், 15வது பட்டாலியன், இரண்டாம் நிலை போலீசாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், 45, தலைமையில், போலீஸ்காரர் அய்யனமூர்த்தி உள்ளிட்ட, 10 போலீசார் ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தில், வாகன சோதனை நடத்தினர். தர்மபுரியில் இருந்து பூக்கள் ஏற்றி வந்த பொலிரோ ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்த இரும்பு தடுப்பை உடைத்துக்கொண்டு, போலீஸ் ஜீப் அருகில் நின்றிருந்த, போலீஸ்காரர் அய்யனமூர்த்தி மீது மோதியது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இன்ஸ்பெக்டர் ஆனந்தனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்த போலீஸ்காரர் அய்யன மூர்த்தியின், மனைவி தமிழ்செல்வி, 25, தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE