வேலூர்: வேலூர் மாவட்டத்தில், கடந்த மாதம், 26ல், 'நிவர்' புயலில் பாதித்த பகுதிகளை பார்வையிட, மத்திய குழுவினர், நேற்று முன்தினம் வேலூர் வந்தனர். இக்குழுவில், தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தலைமையில், மத்திய குழுவின் தலைவரும், மத்திய நீர்வள ஆணைய குழு இயக்குனருமான ஹர்ஷா, மின்சக்தி துறை துணை இயக்குனர் சுமன், செலவினங்கள் துறை இணை இயக்குனர் அமித்குமார், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தரம்வீர் ஜா ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம், வேலூர் மாவட்ட சேத பகுதிகளை குறும்படம் மூலம், மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று விளக்கினார். பின்னர், மத்திய குழுவினர், சேத விபரங்களை பார்வையிட காரில் சென்றனர். அவர்களோடு, தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகனும் சென்றார். காட்பாடி அடுத்த கண்டிப்பேடு, இளையநல்லூரில் சேதமான விவசாய நிலங்களை குழுவினர் பார்வையிட்டனர். மேலும், பொன்னை அணைக்கட்டில், பழுதடைந்த கதவுகள், மாதகுண்டகுப்பத்தில் காட்டூர் ஏரி நிரம்பி வழிந்ததால், சேதமான சாலையை ஆய்வு செய்தனர். ராணிப்பேட்டையில், சேதங்களை பார்வையிட்ட குழுவினரிடம், மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் விளக்கினார். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு குழுவினர் செல்வது ரத்தானதால், ராணிப்பேட்டை, சிப்காட் பெல் விருந்தினர் மாளிகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேத விபரங்களை, மாவட்ட கலெக்டர் சிவன் அருள் கூறினார். துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ''இக்குழுவினர் காட்பாடி, ராணிப்பேட்டையை மட்டும் ஆய்வு செய்தனர். இது கண் துடைப்பு நாடகம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE