மதுரை : சமையல் எண்ணெயில் கலப்படமானது கொலை முயற்சிக்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி வெளியிட்டது.
மேலுார் வழக்கறிஞர் அருண்நித்தி தாக்கல் செய்த பொதுநல மனு:
முந்திரித் தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை உதிரியாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்துதான் விற்க வேண்டும்.கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண்நித்தி குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
மதுரை உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம் ஆஜராகி கூறியதாது:
முந்திரித் தோலிலிருந்து கிடைக்கும் வெல்லப்பாகுவை (மொலாசஸ்) சமையல் எண்ணெயில் கலப்படம் செய்கின்றனர். இதை கலப்பதால் நல்லெண்ணெய்போல் வாசம் வந்துவிடுகிறது. இது பல ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.விருதுநகரில் முந்திரித் தோலில் வெல்லப்பாகு தயாரிக்கும் 60 கம்பெனிகள் உள்ளன. இவை அனுமதி பெறாதவை. சோப் தயாரிக்கக்கூட அதை பயன்படுத்துவதில்லை. முந்திரித் தோலை அரைத்து டீத்துாளில் கலப்படம் செய்கின்றனர். இதற்கு ஏஜன்ட்கள் உள்ளனர், என்றார்.
நீதிபதிகள்: இத்தகைய கலப்படம் கொலை முயற்சிக்கு சமம் என அதிருப்தி வெளியிட்டு உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE