புதுடில்லி : 'கடந்த, 1975ல் அறிவிக்கப்பட்ட, 'எமர்ஜென்சி' எனப்படும் அவசரநிலையை, சட்டவிரோதம்' என அறிவிக்கக் கோரி, 94 வயது மூதாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
காங்கிரசைச் சேர்ந்த இந்திரா பிரதமராக இருந்தபோது, 1975 ஜூன், 25ல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. அது, 1977, மார்ச்சில் திரும்பப் பெறப்பட்டது.அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட, டில்லியைச் சேர்ந்த வீரா செரின் என்ற, 94 வயது மூதாட்டி, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கின் விசாரணையை, 14ம் தேதிக்கு, நீதிபதிகள், எஸ்.கே. கவுல், தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு ஒத்தி வைத்துள்ளது.
மனுவில், வீரா செரின் கூறியுள்ளதாவது:
நானும், என் கணவரும், டில்லியில், தங்கத்தாலான ஓவியங்கள் செய்யும் தொழிலை செய்து வந்தோம். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, என் கணவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர்.இதையடுத்து நாட்டை விட்டு தப்பிச் சென்றோம். என் கணவர் இறந்த பிறகும், அவர் மீதான வழக்கை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இதற்காக நீதிமன்றங்களில் அலைக்கழிக்க செய்தனர்.எங்கள் வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி வைத்ததால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், 2014ல் அளித்த தீர்ப்பில், எமர்ஜென்சி சட்டத்தை எதிர்த்து, எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது என்று கூறியது.நீண்ட இழுபறிக்குப் பிறகு, என் சொத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த அனுமதி கிடைத்தது. எமர்ஜென்சி அறிவிப்பால், நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு, தொல்லைக்கு ஆளானோம். அது சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.மேலும், அதை அமல்படுத்திய அரசு நிர்வாகம், எனக்கு ஏற்பட்ட பாதிப்புகள், மன உளைச்சலுக்கு, 25 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE