பொள்ளாச்சி : 'திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறுக்கு தண்ணீர் திறக்க கூடாது' என, திருமூர்த்தி பாசன விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
உப்பாறு அணை தண்ணீர் திறப்பு மற்றும் மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து கருத்து கேட்டறியும் வகையில், விவசாயிகள் - அதிகாரிகள் சந்திப்பு கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் கோபி, தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம், தாராபுரம் டி.எஸ்.பி., ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் பேசியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைவு, காண்டூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சேதத்தால் நீர் கசிவு; அதிகளவு நீர் திருட்டு காரணங்களால், ஒரு பாசனத்துக்கு, 135 நாட்களுக்கு முழுமையான தண்ணீர் வழங்க இயலவில்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக மழைப்பொழிவு போதியளவு இல்லாததால், ஐந்து சுற்று தண்ணீர் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது.இந்நிலையில், உப்பாறு ஓடையில், பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் இருந்து அணை வரை, 15 தடுப்பணைகள் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் - நவ., மாதம் வரை, 600 மி.மீ., மழை உப்பாறு பகுதியில் பெய்துள்ளது. உப்பாறு தண்ணீர் திறப்பது குறித்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனவே, திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கூடாது.
இவ்வாறு, அவர் பேசினார்
.பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி பேசுகையில்,
''அணைகளில் உள்ள நீர் இருப்பு, பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு, கேரளாவுக்கு தண்ணீர் வழங்கல், ஆழியாறு பாசனம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது, 3.5 டி.எம்.சி., நீர் பற்றாக்குறை உள்ளது. போதிய மழைப்பொழிவு கிடைத்து, அணைகளின் நீர் இருப்பு அதிகரித்தால் மட்டுமே, உப்பாறுக்கு உபரி நீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE