லண்டன்: இங்கிலாந்தில் 90 வயதுள்ள மூதாட்டிக்கு, கொரோனா தடுப்பூசி முதலில் செலுத்தப்பட்டது.
தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் இந்த நிலையில் பைசர் - பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதி அளித்தனர். இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலனளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், பிரிட்டன் அரசு பைசர் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியும் அளித்தது. அதன்படி, இங்கிலாந்தில் இன்று (டிச.,08) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பரிசோதனைகள் தவிர்த்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி உலகிலேயே முதல்நபராக 90 வயது மூதாட்டியான மார்க்ரெட் கீனென் என்பவருக்கு போடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகாரப்பூர்வமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையை மார்க்ரெட் கீனென் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து நேரப்படி சரியாக காலை 6.31 மணிக்கு மார்க்ரெட்டுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்பட உள்ளது. ‛அடுத்த வாரம் தனது 91வது பிறந்தநாளை கொண்டாட உள்ள தனக்கு, இது சிறந்த பிறந்தநாள் பரிசு' என கீனென் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE