புதுடில்லி : டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை போலீஸ் உதவியுடன் பா.ஜ., அரசு சிறை வைத்துள்ளதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் இதை டில்லி போலீசார் மறுத்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 12 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் இதை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று(டிச., 8) நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனிடையே டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (டிச., 7) விவசாயிகளை சந்தித்து பேசியதோடு, அவர்களுக்கு ஆதரவு தருவதாக கூறியிருந்தார். இப்படியான சூழலில் இன்று பாரத் பந்த் போராட்டம் நடந்து வரும் வேளையில் கெஜ்ரிவால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். கெஜ்ரிவால் வீட்டு அருகே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். கெஜ்ரிவாலை சந்திக்க ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும், வீட்டில் இருந்து வெளியே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், மத்திய உள்துறை உத்தரவால் இது நடந்திருக்கிறது என்று அக்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதனிடையே கெஜ்ரிவால் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ள பரவிய செய்தி சமூகவலைதளமான டுவிட்டரிலும் அதிகம் ஒலித்தது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், டில்லி போலீசார் மற்றும் மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராகவும் கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

''இன்று ஒரு முதல்வருக்கு நடந்தது, நாளை உங்களுக்கும் நடக்கலாம். விவசாயிகள் இல்லையேல் உணவு இல்லை, விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்'' என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், ''கெஜ்ரிவால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. பா.ஜ., தூண்டுதலின் பேரில் போலீசாரின் அடக்குமுறை இது'' என கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருவதால் டுவிட்டரில், #BJPHouseArrestsKejriwal, #DelhiPolice, #DelhiCM ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.
டில்லி போலீசார் மறுப்பு
டில்லி முதல்வர் ஜெக்ரிவால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக பரவும் செய்தி உண்மையல்லை. ஆம் ஆத்மி கட்சியினர் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். வழக்கம் போல் அவரது பணிகளை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் போகலாம் என தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE