சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த கடைசி போட்டியில் போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை.

வேட் அரைசதம்
ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், மாத்யூ வேட் ஜோடி துவக்கம் கொடுத்தது. இரண்டாவது ஓவரில் பந்தை சுழற்றிய வாஷிங்டன் சுந்தர், 2வது பந்தில் பின்ச்சை அவுட்டாக்கினார். ஸ்டீவ் ஸ்மித் (24), சுந்தர் சுழலில் போல்டானார். மறுபக்கம் வேகமாக ரன்கள் சேர்த்த மாத்யூ வேட், இத்தொடரில் இரண்டாவது அரைசதம் எட்டினார். 10.4வது ஓவரில் நடராஜன் வீசிய பந்து வேட் காலில் பட்டது. அம்பயர் அவுட் தர மறுக்க, கோஹ்லி ‛ரிவியூ' கேட்காமல் விட்டார்.
ரீப்ளேயில்' பந்து ஸ்டம்சை தகர்ப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அடுத்தடுத்து மேக்ஸ்வெலுக்கு ‛ரிவியூ' கேட்டு வாய்ப்பை வீணாக்கினார் கோஹ்லி. இவர் 38 ரன்னில் ஷர்துல் பந்தில் கொடுத்த கேட்ச்சை, சகார் கோட்டை விட்டார். தொடர்ந்து நடராஜன் பந்தில் பவுண்டரி அடித்த மேக்ஸ்வெல், தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். வேட் 80 ரன்னுக்கு அவுட்டாக, மேக்ஸ்வெல் 54 ரன்னில், நடராஜன் வேகத்தில் போல்டானார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது.

கோஹ்லி நம்பிக்கை
இந்திய அணிக்கு ராகுல் (0) ஏமாற்றம் தர, தவான் 28 ரன் எடுத்தார். சஞ்சு சாம்சன் 10 ரன் எடுக்க, ஸ்ரேயாஸ் 'டக்' அவுட்டானார். பாண்ட்யாவும் (20) கைவிட, போராடிய கேப்டன் கோஹ்லி 85 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 174ரன்கள் எடுத்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் இந்திய அணி 'டுவென்டி-20' தொடரை 2-1 என கைப்பற்றியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE