சென்னை :'உயிர் பலி வாங்கும், மதுரவாயல் பைபாஸ் மழை நீர் வடிகால்களை மூடும் திட்டத்தை, உடனே நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னையில், மோட்டார் சைக்களில் இருந்து தவறி, மழைநீர் வடிகால்வாயில் விழுந்து, தாய் கரோலினா, அவரது மகள் இவாலின் ஆகிய இருவரும் உயிரிழந்த கொடூரமான நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. சென்னையில் பெய்த கனமழையின் போது, இரும்புலியூர் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்த, இந்த மழைநீர் வடிகால், அந்த தாய்க்கும், மகளுக்கும் மரண குழியாக மாறியிருப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணம்.
திறந்தவெளி மழை நீர் வடிகால்களை மூடி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2018ம் ஆண்டில் போடப்பட்ட திட்டத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகம் அனுமதி அளிக்கவில்லை.மத்திய அரசிடம், அ.தி.மு.க., அரசும் வலியுறுத்தவில்லை. இரு அரசுகளின் தோல்வியினால், தாயும், மகளும் பலியாகி உள்ளனர். அந்த பைபாஸ் சாலையில் உள்ள மழை நீர் கால்வாய்களை மூடும், 16 கோடி ரூபாய் மதிப்பு திட்டத்தை, உடனே நிறைவேற்ற, மத்திய, மாநில அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
நொறுங்கட்டும்!
ஸ்டாலினின் மற்றொரு அறிக்கை: உழவே தலை என்கிறது, வள்ளுவம். ஆனால், இங்கு தலையே நிலைகுலைந்து கிடக்கிறது. உயிர் கொடுக்கும் உழவர் உயிர், விலை பேசி விற்கப்படும் வகையில், மூன்று வேளாண் சட்டங்களை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.உழவு என்பது தனிப்பட்ட உழவர் தொழில் மட்டுமல்ல; உயிர் வாழ்வோர் அனைவரின் உரிமை. மண்ணையும், மக்களையும் காக்க, பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும். இனி, வேளாண்மை செழிக்கட்டும்; மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்.
எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக
எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எல்லா வகையிலும், விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய அரசும், அ.தி.மு.க., அரசும் கூட்டணி வைத்து செயல்பட்டு, வளர்ச்சி என்ற போர்வையில், விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில், தற்போதைக்கு வெற்றி பெற்றிருக்கலாம். இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை, ஓட்டுச்சீட்டு வாயிலாக நிச்சயம் கற்பிக்கும். எனவே, எட்டு வழிச்சாலை திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., கைவிட வேண்டும்.