புதுடில்லி:இந்தியாவில், மூன்று நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு, அவசர அங்கீகாரம் வழங்கக் கோரி விண்ணப்பித்து உள்ளன.
அமெரிக்காவின், 'பைசர்' மற்றும் ஜெர்மனியின், 'பயோன்டெக்' நிறுவனங்கள் இணைந்து, கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. அதுபோல, பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற, கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளன.
இந்த தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை, புனேவைச் சேர்ந்த, சீரம் மையம் பெற்றுள்ளது. இவை தவிர, ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும், அவசர அங்கீகாரத்தின் கீழ், தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, மத்திய மருந்துகள் தரக்
கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
இந்த விண்ணப்பங்கள் இன்று பரிசீலிக்கப்பட உள்ளன. 'இவை அனைத்துக்கும் அல்லது ஏதோ ஒன்றுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்படும்' என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.கொரோனா பாதிப்பு போன்ற, அசாதாரணமான காலத்தில், தடுப்பூசி மருந்தின் திறன் அடிப்படையில், அவசர அங்கீகாரம் அளிக்கும் விதிமுறைகள், இந்திய மருந்து ஒழுங்குமுறை சட்டத்தில் இல்லை.ஆனால், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தில்,
அத்தகைய விதிமுறைகள் உள்ளன. தடுப்பூசி மருந்தின் மூன்று கட்ட ஆய்வுகளில், தடுப்பூசி திறன், குறைந்தபட்சம், 50 சதவீதமாக இருந்தால் தான், அவசர பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்க முடியும்.
மேலும், 3,000க்கும் அதிகமானோரிடம் தடுப்பூசி மருந்தை செலுத்தி, அது குறித்து சேகரிக்கப் பட்ட விபரங்களை அளிக்க வேண்டும். எனினும், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டுஅமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, ஏற்கனவே சில மருந்துகளை வழங்க, அனுமதி
அளித்துள்ளது.அதை பின்பற்றி, தடுப்பூசி மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்படும் என, தெரிகிறது.
ஒரு 'டோஸ்' ரூ.250
சீரம் மையத்தின், 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து, ஒரு, 'டோஸ்' 1,000 ரூபாயாக இருக்கும் என, சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில், மத்திய அரசு, மொத்தமாக தடுப்பூசியை கொள்முதல் செய்வதால், ஒரு டோஸ், 250 ரூபாய்க்கு கிடைக்கும் என, தெரிகிறது.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கும், சீரம் மையத்திற்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE