ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் நுாலகத்தின் உள்ளே மழை நீர் வருவதால், குடை பிடித்தபடி, வாசகர்கள் புத்தகம் படிக்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில், பழைய கட்டடத்தில், வட்டார முழு நேர கிளை நுாலகம் செயல்படுகிறது. இங்கு, 57 ஆயிரம் புத்தகங்கள், 5,000 உறுப்பினர்கள், 52 புரவலர்கள் உள்ளனர்.தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டத்தில் தங்கியுள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், தினமும், இந்த நுாலகத்திற்கு வந்து, புத்தகம் படிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நுாலக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, பலவீனமாக உள்ளது. மழைக் காலத்தில், விரிசல் வழியாகவும், சேதமடைந்து காணப்படும் கூரை வழியாகவும், நுாலகத்தின் உள்ளே அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது.இதனால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் சிலர், குடை பிடித்தபடி, புத்தகங்களைப் படிக்கின்றனர். மேலும், தண்ணீர் கசிவால், புத்தகங்கள் சேதமடைந்து வருகின்றன.இது குறித்து, வாசகர்கள் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் நுாலகக் கட்டடக் கூரை சேதமடைந்து, எந்த நேரத்திலும், இடிந்து விழும் நிலையில் உள்ளது.சேதமடைந்த வழியே, நுாலகத்தின் உள்ளேயே மழை போல் தண்ணீர் கசிகிறது. ஸ்ரீபெரும்புதுார் பஸ் நிலையம் அருகே உள்ள இந்த நுாலகத்தை தரம் உயர்த்தினால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.தொகுதி எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் பல துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.நுாலக கட்டடம் இடிந்து விழுந்து, அசம்பாவிதம் நிகழும் முன், புதிய கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாவட்ட நுாலகரிடம் கேட்டபோது, 'புதிய கட்டடம் கட்டும் வரை, நுாலகத்தை, தற்காலிகமாக வேறு இடத்தில் அமைக்க, வாடகை கட்டடம் பார்த்து வருகிறோம்' என, தெரிவித்தார்.கண்டு கொள்ளாத தொழிற்சாலைகள்ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றி, ஐந்து, 'சிப்காட்' தொழிற்பூங்காக்களில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிறுவனங்களின் ஆண்டு வருமானத்தில், 2 சதவீதம் தொகையை, சி.எஸ்.ஆர்., எனும் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்தத் தொகையில், மக்களின் வளர்ச்சிப் பணிக்கு, தொழிற்சாலைகள் செலவிட வேண்டும் என, விதி உள்ளது. இந்த நுாலகத்தை சீரமைக்க, முன்வர வேண்டும் என, பல தொழிற்சாலைகளுக்கு கோரிக்கை வைத்தும், எந்த நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE