தவியாய் தவிக்கும் சிராக்!
'அதிரடி அரசியல்வாதியாக நினைத்து, எக்குத்தப்பாக ஏதாவது செய்தால், இப்படித் தான் நடுத்தெருவில் நிற்க வேண்டும்' என, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானை கிண்டலடிக்கின்றனர், பீஹார் மாநில அரசியல்வாதிகள். மத்திய அமைச்சராக இருந்து, சமீபத்தில் காலமான ராம்விலாஸ் பஸ்வானின் மகன் தான், சிராக். தந்தை இறந்ததுமே, அவரது நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தபடியே, சக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தையும், அதன் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமாரை கடுமையாக தாக்கி பேசினார் சிராக். ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து, சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களையும் நிறுத்தினார். இந்தத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் சரிவை சந்தித்தது. பா.ஜ.,வின் பெருந்தன்மையால், நிதிஷ் குமார், மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இதை, சிராக் பஸ்வான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், ராஜ்யசபா தேர்தல் விஷயத்திலும், அவருக்கு தண்ணி காட்டியது, பா.ஜ.,தன் தந்தை ராம்விலாஸ் பஸ்வான் இறந்ததால், அவர் வகித்து வந்த ராஜ்யசபா சீட், தே.ஜ., கூட்டணி கட்சி என்ற அடிப்படையில், தங்கள் கட்சிக்குத் தான் கிடைக்கும் என, பெரிதும் நம்பியிருந்தார் சிராக். ஆனால், பா.ஜ., மேலிடம், வேட்பாளரை நிறுத்தி விட்டது. இதனால், சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் புலம்பி தவிக்கிறார் சிராக் பஸ்வான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE