பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: முதல்வர் பழனிசாமியை பற்றி பேச, தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜாவிடம் என்ன தகுதி இருக்கிறது. ஊழலின் மொத்த உருவமான, தி.மு.க., ஜெயலலிதா குறித்து பேச உரிமையில்லை. விவாதத்திற்கு முதல்வரை ஏன் ராஜா கூப்பிடுகிறார், நான் வருகிறேன். எங்கே வந்து விவாதம் நடத்துவது?
'டவுட்' தனபாலு: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்று, ஐந்தாறு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள், தமிழக தேர்தல் களம், இப்படி சூடுபிடித்துள்ளதே... பரஸ்பரம் கட்சித் தலைவர்கள், லஞ்சம், ஊழல், முறைகேடு என பட்டியலிட்டு, பாயத் துவங்கியுள்ளனர். இப்படியே போனால், வரும் நாட்களில் தெருச்சண்டை போல மாறி விடுமோ என்பதே, நடுநிலையாளர்களின், 'டவுட்' ஆக உள்ளது.
மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்ஹாசன்: அறத்தின் பக்கம் நிற்பவனை பார்த்து, 'சங்கி, பி டீம்' என்பவர்களின் நோக்கம் ஊழலை போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. 6 வயதிலிருந்தே நான், 'ஏ டீம்' என்பதை, 'ஏ-1' ஊழல் புத்திரர்களுக்கு உரைக்கும்படி சொல்கிறேன்.
'டவுட்' தனபாலு: நீங்கள், 'ஏ டீம்' என்பதில், உங்கள் ரசிகர்களுக்கு, 'டவுட்டே' வராது. அந்த அளவுக்கு, உங்கள் படங்களில், கவர்ச்சி துாக்கலாகவே இருக்கும். ஆனால், ஊழல் புத்திரர்கள் என, சகட்டுமேனிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரையும் சாடுகிறீர்களே, தேர்தலில், பா.ஜ.,வுடன் சேர்ந்து போட்டியிடத் தான் திட்டமோ என்ற, 'டவுட்' வருதே!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: ஆளும் கட்சி என்னென்ன தவறு செய்கிறதோ, அதை சுட்டிக்காட்டி வெளிப்படுத்துவது தான், எதிர்க்கட்சித் தலைவரின் வேலை; அது தான் ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய மரபு; அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி 'அறிக்கை நாயகர்' என்று பட்டம் கொடுத்திருக்கிறார். மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது சரி தான். ஆனால், அதற்காக, ஒரு நாளைக்கு, ஐந்தாறு அறிக்கைகள் விட்டு, அத்தனையிலும், எடுபிடி அரசு, அடிமை அரசு, கையாகாலாத அரசு என, திரும்பித்திரும்பி வசை பாடுகிறீர்களே... இதை பார்க்கும் போது, அறிக்கை தயாரிக்கும் நபர்கள், 'அட்மின்கள்' எண்ணிக்கையை அதிகரித்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE