ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வடமங்கலம் மற்றும் சிவன்கூடல் கிராமங்களில், 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், அறுவடைக்கு தயாராக இருந்தன.இந்நிலையில், நிவர் புயல் மற்றும் கன மழை காரணமாக, வளர்ந்த நெற்கதிர்கள், நிலத்தில் சாய்ந்து நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், நீரில் மூழ்கிய நெற்பயிர்களை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், நேற்று, நேரில் சென்று பார்வையிட்டனர்.அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதே போல், காஞ்சிபுரம் ஒன்றியம், காரை கிராமத்தில், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும், அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், பின், நிருபர்களிடம் கூறியதாவது:எவ்வளவு மழை பெய்தாலும், பாதிப்பு ஏற்படாத வகையில், அனைத்து பகுதிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், வெள்ள பாதிப்பை தடுக்க, சிறந்த முறையில் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்த பின், பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.'ஆன்லைன்' மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில், 14 நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE