வானளாவிய கட்டடங்களில், தீ விபத்து ஏற்பட்டால் அணைக்க, 'ஸ்கை லிப்ட்' எனும் ராட்சத ஏணி மூலம், தீயணைப்பு துறையினர், ஒத்திகை பார்த்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானளாவிய கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. எதிர்பாராதவிதமாக, இவற்றில் தீ விபத்து ஏற்பட்டால், அணைக்கும் முறைகள் பற்றி, தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, 2016ல், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, 104 மீ., உயரம் வரை செல்லக்கூடிய இரண்டு மற்றும், 54 மீ., வரை செல்லும், மூன்று, 'ஸ்கை லிப்ட்' வாங்கப்பட்டது.
இந்த வாகனங்கள் வாயிலாக, தரைத்தளத்தில் இருந்து, உயரமான கட்டடங்களில் தீயை அணைக்க முடியும். அத்துடன், கட்டடத்தில் சிக்கி தவிப்போரில், நான்கு நபர்களை, ஒரே நேரத்தில் மீட்க முடியும்.தண்ணீர் லாரி மற்றும் கட்டடத்தில் உள்ள, தண்ணீர் தொட்டிகளில் இருந்து, இந்த வாகனங்களுடன் இணைத்து தீயை அணைக்கலாம்.
தற்போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானளாவிய கட்டடங்கள் அதிகரித்து வருவதால், ஸ்கை லிப்ட் வாகனங்கள் வாயிலாக, உயர் மாடி கட்டடங்களில் தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து, தீயணைப்பு துறையினர், பொது மக்கள் மத்தியில் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில் உள்ள, தனியார் நிறுவன கட்டடத்தில், தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர் சேட் தலைமையில், நேற்று தீயணைப்பு துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது, எட்டாவது மாடியில் சிக்கி தவிப்பது போல இருந்த, கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE