சென்னை:எந்த பொருளும் வாங்காதோர், தங்கள் ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டாக மாற்றித்தரும்படி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், முன்னுரிமை, முன்னுரிமை அந்தியோதயா, முன்னுரிமையற்ற அரிசி, முன்னுரிமையற்ற சர்க்கரை, எந்த பொருளும் வாங்காதது என்ற பிரிவுகளில், ரேஷன் கார்டு வழங்கப்படுகின்றன. அவை, விண்ணப்பதாரரின், விருப்பத்தின் பேரில் வழங்கப்படுகிறது.எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர், ரேஷன் கார்டை முகவரி சான்றாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, 5.80 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்கள், இலவச அரிசி பெறும் வகையில், அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதற்காக, சர்க்கரை கார்டுதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் கார்டுதாரர்களும், தங்களின் கார்டை, அரிசி கார்டாக மாற்றி தரும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்கள் கூறியதாவது:நல்ல வருவாய் ஈட்டும் நிலையில் இருந்து, எந்த பொருளும் வாங்காத கார்டை வாங்கினோம். ஓய்வு பெற்றதால் வருவாய் குறைந்து, ஏழைகளாகி விட்டோம். எனவே, சர்க்கரை கார்டுதாரர்களை போல, எந்த பொருளும் வாங்காத கார்டுதாரர்களையும், அரிசி அல்லது சர்க்கரை கார்டாக வகை மாற்றம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE