திருத்தணி : தொடர் மழையால், திருத்தணி குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
'நிவர்' மற்றும் 'புரெவி' புயலால், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 11 நாட்களாக தொடர்ந்து மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், திருத்தணி ஒன்றியம், அலமேலுமங்காபுரம் ஊராட்சியில் உள்ள, ஏ.எம்.பேட்டை காலனி மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில், தொடர் மழையால், குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் புகுந்தது. சில வீடுகளில் உள்ளேயும் மழை நீர் புகுந்துள்ளது.மேலும், தெரு மற்றும் வீடுகளின் வாசல் பகுதியில், மழை நீர் தேங்கியுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கும், வீடு இடிந்து விழுந்தவர்களுக்கு முதற்கட்ட நிவாரணம், வழங்காமலும், திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் ஒன்றிய நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.எனவே, கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE