திருத்தணி : 'அலுவலகத்தில் உட்கார்ந்து சீட்டை தேய்க்காம வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை செய்யுங்க' என, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டர், அதிகாரிகளை எச்சரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு, நேற்று காலை, கலெக்டர் பொன்னையா திடீரென நேரில் வந்தார். அப்போது அவருடன் மாவட்ட திட்ட அலுவலர்கள் ஸ்ரீதர், லோகநாயகி ஆகியோரும் உடன் வந்தனர். பின், வட்டார வளர்ச்சி அலுவலக அறைக்கு சென்று கலெக்டர் உட்கார்ந்தார்.பின், பொறியியல் பிரிவில் பணியாற்றும் பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோரை வரவழைத்து, தற்போது ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், வளர்ச்சி பணிகளுக்கான ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது, பெரும்பாலான பணிகள் இரண்டு, மூன்று ஆண்டுகளாக முடிக்காமல் இருந்ததை கண்டுபிடித்து, விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளை எச்சரித்தார்.மேலும், ஒன்றிய மேலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் பணிகள் தாமதம் ஏன், பணி முடிந்த பயனாளிகளுக்கு, ஏன் இன்னும் தொகை வழங்கவில்லை. இதில், கமிஷன் எதிர்பார்க்கிறீர்களா என, அதிகாரிகளை பிடித்து டோஸ் விட்டார்.
பின், கலெக்டர் பொன்னையா, அனைத்து அதிகாரிகளையும் நிற்க வைத்து, அலுவலகத்திற்கு வந்து சீட்டை தேய்க்கமா, ஒழுங்கா வேலை செய்யுங்க. வாங்கிற சம்பளத்திற்காவது வேலை செய்யுங்க எனவும் எச்சரித்தார். மொத்தத்தில், கலெக்டர் அதிரடி விசிட்டால், ஒன்றிய அலுவலர்கள் பயந்து நடுங்கினர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏமாற்றம்ஒன்றிய அலுவலகத்திற்கு கலெக்டர் வந்ததை அறிந்த, ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என, 30க்கும் மேற்பட்டோர், கலெக்டரை சந்தித்து சால்வை அணிவிக்க வந்தனர்.ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகளை பார்த்து, யாரும் எனக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என, கலெக்டர் கூறியதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE