திருவல்லிக்கேணி : மோசடி பேர்வழிகளால், வங்கி கணக்கில் இருந்து, பெண் இழந்த பணத்தை, திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசார் மீட்டு தந்துள்ளனர்.
சூளைமேடு, பெரியார்பாதையைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, 33. இவரது மொபைல் போனிற்கு, கடந்த, 12ம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர், 'நான், ஐ.டி.பி.ஐ., வங்கியில் பணிபுரிகிறேன். 'உங்களது, வங்கி கணக்கு, டெபிட் கார்டு எண் தெரிவிக்குமாறும், இல்லையென்றால், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது' என கூறியுள்ளார்.
இதை நம்பிய அப்பெண், அனைத்து விபரங்களுடன், மர்மநபர் கேட்ட, 'ஓ.டி.பி.,' எண்ணையும் தெரிவித்து உள்ளார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 29 ஆயிரத்து, 147 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.அப்போது தான், ஏமாற்றப்பட்டதை லோகேஸ்வரி உணர்ந்தார்.இது குறித்து திருவல்லிக்கேணி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணையில், புகார்தாரரின் வங்கி கணக்கில் இருந்து, 'சாஹிபே' sahipay எனும் தளம் வாயிலாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து, இரு நிறுவனத்திற்கும், உரிய வழிகாட்டுதல்படி, பணத்தை உரியவரின் வங்கி கணக்கில் செலுத்த, சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பினர்.
பின், லோகேஸ்வரி வங்கி கணக்கில், 20 ஆயிரத்து, 342 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு, லோகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE