சென்னை:நொளம்பூரில் கட்டட விதிமீறல், அடிப்படை வசதிகள் குறைபாடுகளால்,தனியார் நிறுவன திட்டத்தில் வீடு வாங்கியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை முகப்பேரை அடுத்த நொளம்பூரில், 'பி.பி.சி.எல்.,வஜ்ரா' என்ற பெயரில் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது. இதில், மொத்தம், 134 வீடுகள் உள்ளன. தற்போது வரை, 120 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த, 2014ல் துவங்கிய கட்டுமான பணிகள் ஓரளவுக்கு முடிக்கப்பட்டு, 2017ல் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. இங்கு வீடு வாங்கிய பலரும் குடியேறி விட்டனர்.
வீடுகள் விற்பனை முழுமையாக முடியும் முன், வீட்டின் தரம் தொடர்பான புகார்கள் வரத் துவங்கி உள்ளன.இது குறித்து, அங்கு வீடு வாங்கிய உரிமையாளர்கள் கூறியதாவது: விற்பனையின் போது, கட்டுமான நிறுவனம் உறுதி அளித்த அடிப்படை வசதிகள், முறையாக செய்து தரப்படவில்லை. குறிப்பாக, 24 மணி நேரமும் தரமான தண்ணீர் வசதி என்றனர்.ஆனால், கழிவு நீர் கலந்தது போன்ற வண்ணத்தில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இதனால், உடல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
புதிதாக கட்டப்பட்ட, சில ஆண்டுகளிலேயே, கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள், நீர் கசிவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக புகார் தெரிவித்தால், கட்டுமான நிறுவனம் உரிய பதில் அளிப்பதில்லை.கட்டடம் உண்மையிலேயே தரமாக கட்டப்பட்டுள்ளதா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இது, எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சட்டப்படி வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி, பராமரிப்பு பொறுப்பை கட்டுமான நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கட்டுமான நிறுவனம் சங்கம் ஏற்படுத்தாமல், உரிமையாளர்களுக்குள் மோதலை ஏற்படுத்துகிறது.இங்கு, அனைத்து வீடுகளுக்கும் வாகன நிறுத்துமிட வசதி முறையாக செய்யப்படவில்லை.
பக்கவாட்டு காலியிடத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் இடித்தனர்.இத்தகைய விதிமீறல்களை கட்டுமான நிறுவனம் மறைத்து உள்ளது. இந்நிறுவனம் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், எங்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE