தாம்பரம் : ஆயுர்வேத டாக்டர்களும், அறுவை சிகிச்சை செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து, நேற்று, இந்திய மருத்துவ சங்கத்தின்,தாம்பரம் கிளை நிர்வாகிகள், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆயுர்வேத மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், அறுவை சிகிச்சை செய்யலாம் என, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சி.சி.ஐ.எம்., எனப்படும் இந்திய மருத்துவத்திற்கான மத்திய கவுன்சில், நவ., 22ல் அனுமதி வழங்கியது.இதை கண்டித்து, நேற்று, இந்திய மருத்துவ சங்கத்தின், தாம்பரம் கிளை சார்பில், மேற்கு தாம்பரம், கக்கன் தெருவில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், இந்திய மருத்துவ சங்கத்தின், தாம்பரம் கிளை தலைவர், டாக்டர் நிர்மல் பிரெட்ரிக், செயலர் டாக்டர் சரவணகுமார், நிதி செயலர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அவர்கள் கூறியதாவது:மத்திய அரசு, ஆயுர்வேத டாக்டர்களுக்கும், அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கி உள்ளது, நவீன மருத்துவத்தின் வளர்ச்சியை தடுக்கும் செயலாகும்.
தகுந்த கல்வி, ஆராய்ச்சி இன்றி, அறிவியல் உணர்வுகளை படிக்காமல், ஆயுர்வேத டாக்டர்கள், அறுவை சிகிச்சைகளில் ஈடுபட்டால், அது, பொதுமக்கள் உயிருக்கு பாதகமாக அமையும்.60 ஆண்டுகால நவீன மருத்துவ வளர்ச்சியால், நம் நாட்டின் டாக்டர்கள், உலக அளவில் போற்றப்படுகின்றனர்.இதனால், சர்வதேச அளவில், பல நாடுகளில் இருந்தும், நம் நாட்டிற்கு, மருத்துவ சிகிச்சைக்காக பலர் வருகின்றனர்.இதை கருத்தில் கொண்டு, இந்த அரசாணையை அரசு திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சர்குலேஷன் விருப்பச் செய்தி//
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE