சென்னை:சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், வரும், 14ம் தேதி நடக்க உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, அ.தி.மு.க., துவக்கி உள்ளது. தேர்தல் பணிகளை கவனிக்க, மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நவ., 21ம் தேதி, சென்னை வந்தார். அதற்கு முந்தைய நாள், அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பூத் கமிட்டிக்கு, அதிக அளவில் ஆட்கள் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மறுநாள், அமித் ஷா பங்கேற்ற அரசு விழாவில், பா.ஜ., கூட்டணி தொடரும் என, முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிவித்தனர். இந்த சூழ்நிலையில், அடுத்த மாதம் கட்சி துவக்கப் போவதாக, ரஜினி அறிவித்துள்ளார்.அவர் கட்சி துவக்கினால், தமிழக அரசியலில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது, கணிக்க முடியாததாக உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளில் இருந்தும் பலர், ரஜினி கட்சிக்கு தாவலாம் என, தகவல் பரவியுள்ளது.
தேர்தல் கூட்டணி, புதிய அரசியல் சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், வரும், 14ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது.கடந்த மாதம், 20ம் தேதி நடந்த கூட்டத்தில், பொதுத் தேர்தல் சம்பந்தமாக, என்னென்னப் பணிகளை செய்ய வேண்டும் என, ஆலோசனை கூறப்பட்டது. அதன்படி, தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விபரங்களுடன் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE