ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே, போட்டி போட்டு சென்ற படகுகள், பாம்பன் ரயில் துாக்கு பாலம் மீது மோதின.
'புரெவி' புயல் அச்சத்தால், டிச., 1ல், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள், 170க்கும் மேலான விசைப்படகுகளை, பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து, குந்துகால் கடற்கரையில் நிறுத்தினர்.டிச., 3, 4ல் வீசிய சூறாவளியால், 40க்கும் மேலான படகுகள் சேதமடைந்தன. புயல் வலுவிழந்ததால், படகுகளை மீண்டும் ராமேஸ்வரம், மண்டபம் கொண்டு வந்தனர்.
நேற்று மதியம், 12:00 மணிக்கு பாம்பனில் ரயில் துாக்கு பாலம் திறந்ததும், பாலத்தை கடந்து செல்ல, மீனவர்கள் போட்டி போட்டு படகுகளை அதிவேகமாக இயக்கினர்.ரயில்வே பொறியாளர்கள் சிவப்பு கொடி காட்டி, வரிசையாக வரும்படி அறிவுறுத்தியும், மீனவர்கள் பொருட்படுத்தாததால், இரு படகுகள் உரசிக் கொண்டே வந்தன. துாக்கு பாலம் மீது, ஒரு படகு மோதியதில், படகில் உள்ள இரும்பு பகுதி உடைந்து, பாலத்திற்கும் சேதம் ஏற்பட்டது.
புயலால் நவ., 29 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால், ஒன்பது நாட்களுக்கு பின், இன்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களும், நாளை, பாம்பன் மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE