வேலுார்:'நிவர்' புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர், வேலுார் வந்தபோது, துரைமுருகன் ஆதரவாளர்கள், போலீசாரை ஆபாசமாக பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
'நிவர்' புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட, மத்திய ஆய்வுக் குழுவினர், நேற்று முன்தினம் வேலுார் வந்தனர். காட்பாடி அருகே, வள்ளிலை பகுதிக்கு, அக் குழுவினர், பகல், 12:00 மணிக்கு மூன்று கார்களில் சென்றனர்.
வழிவிடவில்லை
அவர்களுக்கு பின்னால், பாதுகாப்புக்கு, வேலுார் ரிசர்வ் போலீஸ் டி.எஸ்.பி., விநாயகம், ஜீப்பில் சென்றார். பின்னால், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், கதிர்ஆனந்த் எம்.பி., மற்றும் தி.மு.க.,வினர் பலர், கார்களில் சென்றனர்.
துரைமுருகனின் கார், முந்திச் செல்ல முயன்றபோது, டி.எஸ்.பி., விநாயகம் ஜீப் வழி விடவில்லை. தொடர்ந்து, 2 கி.மீ., ஹாரன் அடித்துக் கொண்டே படுவேகமாக சென்ற கதிர் ஆனந்த் கார், டி.எஸ்.பி., விநாயகத்தின் ஜீப்பை வழிமறித்தது.
காரிலிருந்து இறங்கியகதிர் ஆனந்த், துரைமுருகன் தம்பி துரைசிங்காரம், காட்பாடி பகுதி செயலர் சுனில்குமார், டாக்டர் விஜய் ஆகியோர், தகாத வார்த்தைகளால், டி.எஸ்.பி., விநாயகத்தையும், போலீசாரையும் திட்டினர். மேலும், ஜீப் கண்ணாடியை உடைக்க முயன்றனர்.இச்சம்பவத்தை வீடியோ எடுத்த, 'டிவி' வீடியோ கிராபர்களும் மிரட்டப்பட்டனர். இதற்கிடையே, டி.எஸ்.பி., விநாயகம், துரைமுருகனிடம் சென்று வருத்தம் தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
இதை, போலீசார் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.துரைமுருகன் துாண்டுதலில் தான், இது நடந்ததாக போலீசார் வேதனையுடன் கூறினர். சம்பவம் குறித்து, தமிழக அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், சம்பந்தப்பட்ட, தி.மு.க.,வினர் மீது, வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE