கோவை:ஆன்லைன் மூலம், மாநில அளவிலான கலாஉத்சவ் போட்டிகள், நேற்று துவங்கின. வரும் 15ம் தேதி வரை நடக்கின்றன.ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் மத்தியில் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளிகள் திறக்கப்படாததால், இப்போட்டிகள், அந்தந்த பள்ளி அளவில், மாணவர்களின் திறமைகள் வீடியோவாக, மாவட்ட தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தோருக்கு, நேற்று மாநில அளவிலான போட்டிகள், ஆன்லைன் மூலம் நடந்தன.கல்வி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வரும் இப்போட்டிகளுக்கு, மாவட்ட வாரியாக, நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நேரத்தில், மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவர். இதை ஆன்லைன் மூலமாக கண்டு, நடுவர்கள் தகுதியானவர்களை தேர்வு செய்வதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், கல்வி தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும் பிரசன்டேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இப்போட்டிகளை சி.இ.ஓ., உஷா மற்றும் டி.இ.ஓ., (எஸ்.எஸ்.குளம்) கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.நடனம், இசைக்கருவிகள் வாசித்தல் என, ஒன்பது வகையான போட்டிகள், மாணவர் மற்றும் மாணவியருக்கு பிரத்யேகமாக வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.வெற்றி பெறுவோர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பர் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE