பல்லடம்:பல்லடம் அருகே, சமூக விரோத செயல்கள் தாராளமாக நடந்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.பல்லடம் அருகே, 'கரைப்புதுார், சின்னகரை, அருள்புரம் சுற்று வட்டார பகுதிகளில், பல ஆயிரம் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. முறைகேடான மது விற்பனை, போதை பொருட்கள் விற்பனை, மற்றும் இதர சமூக விரோத செயல்கள் இரவு நேரங்களில் அதிகம் நடக்கின்றன.அப்பகுதியினர் கூறியதாவது :பள்ளி கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில், மாணவர்கள், இளைஞர்களை மையப்படுத்தி போதை பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. பெட்டி கடைகள், மளிகை, பீடா, மற்றும் பேன்ஸி என, பல்வேறு கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன.இப்பகுதியில், ஏற்கனவே மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, முறைகேடான மது விற்பனை, சூதாட்டம், வழிப்பறி என, அனைத்து சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.சின்னக்கரை, கரைப்புதுார் பகுதிகளில் நடந்த சூதாட்டம், சேவல் சண்டை என, பல்வேறு வழக்குகளை பல்லடம் போலீசார் பதிவு செய்துள்ளனர். இருந்தாலும், சமூக விரோத செயல்கள் குறைந்ததாக இல்லை. போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE