சென்னை:அரசு பணிக்கு நிர்ணயிக்கப்படும் கல்வித்தகுதி முழுவதையும் தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு ஏழு மாதங்களுக்கு பின் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ் வழியில் படிப்போருக்கு தமிழக அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சட்டம் 2010 செப். 30ல் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைத்தது. ஆனால் குறிப்பிட்ட வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியில் படித்தவர்களும் அடுத்த கல்வியை தமிழ் வழி கல்வியில் படித்ததாக கூறி வேலை பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண துவக்கம் முதல் தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தாண்டு மார்ச்சில் சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இதற்கு எதிர்கட்சிகள் சமீபத்தில் கண்டனம் தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாக அந்த சட்ட திருத்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
புதிய சட்ட திருத்தத்தின்படி அரசு பணிகளுக்கு எந்த கல்வி தகுதி நிர்ணயிக்கப்படுகிறதோ அதை முழுமையாக தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.இதன்படி கல்வித்தகுதி 10ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டால் அதுவரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதுவே பிளஸ் 2; இளநிலை; முதுநிலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி என்றால் அந்த கல்வி வரை தமிழில் படித்திருக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE