திருப்பூர்;ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, 2020-21ம் கல்வியாண்டுக்கான, 'பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீடு' சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி வழிநடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இதன் சிறப்பம்சம்.கடந்த, 2018 -19ல் ஒன்றியத்துக்கு, 20 பள்ளிகள் வீதம், 8 ஆயிரத்து, 260 பள்ளிகளிலும், 2019-20ல் ஒன்றியத்துக்கு, 40 பள்ளிகள் வீதம், 16 ஆயிரத்து, 520 பள்ளிகளிலும் மதிப்பீடு நடத்தப்பட்டது. இந்நிலையில், 2020-21ம் ஆண்டுக்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து பள்ளிகளும் தங்களை தாங்களே நேர்மறை செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.இதில், வகுப்பறை, நுாலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, சாய்தளம், மதிய உணவு பொருட்கள், குடிநீர் வசதி, கழிப்பறை, கை கழுவும் வசதிகள் போன்ற பள்ளி வளாகங்களை கையாளுதல் குறித்து சுயமதிப்பீடு செய்யப்படும். மேலும், பள்ளி தலைமை மற்றும் மேலாண்மை, உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு போன்றவையும் ஆய்வு செய்யப்படும்.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றியத்துக்கு தலா, 40 பள்ளிகள் வீதம், 520 பள்ளிகளில் புறமதிப்பீடு மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு பள்ளிக்கு, 600 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE