சூலுார்;நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால், ஒரு குட்டை பல ஆண்டுகளாக வறண்டு வானம் பார்த்த பூமியாக மாறியுள்ளது. இதனால், சுற்றுவட்டார விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செலக்கரச்சல் கிராமம். இங்கு, 36 ஏக்கர் பரப்பில் கருவேலங்குட்டை உள்ளது. முற்காலத்தில், சுற்றுப்பகுதிகளில் உள்ள லட்சுமி நாயக்கன்பாளையம், செலக்கரச்சல், அக்கநாயக்கன்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டன்பாளையம், புளியமரத்துப்பாளையம் உட்பட கிராமங்களில் உள்ள, 5,000ம் ஏக்கர் விவசாய நிலங்களில், இந்த குட்டையில் தேங்கும் மழை நீரால், நல்ல சாகுபடி நடந்தது. ஆனால், தற்போது இந்த குட்டையில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி, 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், விவசாயம் கேள்விக் குறியாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த குட்டையில், நூற்றுக்கணக்கான கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.உள்ளூர் இளைஞர்கள், 'சிறுதுளி' அமைப்பு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இக்குட்டையில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி, துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டன. நீரை சேமித்து வைக்க குட்டை தயாராக இருந்தும் மழைநீர் வராததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர் திருநாவுக்கரசு கூறியதாவது:லட்சுமி நாயக்கன்பாளையம், புளியமரத்துப்பாளையத்தில் இருந்து குட்டைக்கு வரும் நீர்வழித்தடங்கள் அடைபட்டுள்ளன. தனியார் நிலங்களுக்கு நீர் செல்ல குழாய் பதிக்காமல், மண் கொட்டப்பட்டு உள்ளதால், மழைநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டு, ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறதே தவிர, கருவேலங்குட்டைக்கு வருவதில்லை. அதனால், அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் இப்பகுதியில் அதலபாதாளத்தில் உள்ளது. போதிய மழையின்றி நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. தேவையான தண்ணீர் இன்றி விவசாய சாகுபடி குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை குட்டைக்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என்பதே கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE