அன்னுார்;அத்திக்கடவு திட்டத்தின், ஆறாவது நீரேற்று நிலையம் கட்டும் பணி, 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது; இப்பணியை, பொறியாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான 1,044 குளம், குட்டைகளில், ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., நீர் நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள், கடந்தாண்டு டிசம்பர் முதல் நடந்து வருகிறது. 1,652 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில், ஆறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நீர் உந்தப்பட்டு, குளங்களில் நிரப்பப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில், அன்னுார் அடுத்த குன்னத்துாராம்பாளையத்தில், நீரேற்று நிலையம் அமைக்கும் பணி, நான்கு மாதங்களுக்கு முன் துவங்கியது.நீரேற்று நிலைய கட்டுமான பணி இரவு பகலாக நடக்கிறது. இதில், 28 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நில மட்டத்தொட்டி கட்டப்படுகிறது. ஐந்தாவது நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் நீர் இந்த தொட்டியில் நிரப்பப்பட உள்ளது. ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஆறு 'வெர்ட்டிகல் டர்பைன்' பம்புகள் வாயிலாக நீர் உந்தப்பட்டு, அன்னுார், எஸ்.எஸ்.குளம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலுார் ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளில், நிரப்பப்பட உள்ளது. இதற்காக, தலா 735 எச்.பி., மின்திறன் உள்ள ஆறு பம்புகள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒரே சமயத்தில் நான்கு பம்புகள் இயங்கும் வகையிலும், இரண்டு பம்புகள் சுழற்சி முறையில் பயன்படுத்தவும் நிறுவப்படுகிறது. நீரேற்று நிலையத்தில், 2,350 கேவி உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்த மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது.நேற்று மதியம், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், செயற்பொறியாளர் அன்பழகன் மற்றும் உதவி பொறியாளர்கள், நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்து, ஒப்பந்த நிறுவன அதிகாரிகளிடம், பணிகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, 40 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு, குளம், குட்டைகளுக்கு, நீர் வினியோகம் துவங்கிவிடும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE