மேட்டுப்பாளையம்:மருதுார்- செல்லப்பனுார் சாலை சேறும், சகதியுமாக உள்ளதால், பொதுமக்கள் இவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.காரமடை அடுத்த நெல்லித்துறை அருகே, பவானி ஆற்றிலிருந்து, கவுண்டம்பாளையம் - வடவள்ளிக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை, மருதுார் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பனூரில் சுத்தம் செய்து, குழாய் வழியாக அனுப்பப்படுகிறது. இந்நிலையில், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அதனால் சிமெண்ட் குழாய்க்கு பதிலாக, இரும்பு குழாய் பதிக்கும் பணிகள், தற்போது நடைபெற்று வருகின்றன.மருதுார் செல்லப்பனூர் செல்லும் தார் சாலையில், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இதனால் செல்லப்பனுார் தார் சாலை முற்றிலும் சேதமடைந்தது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், இந்த சாலையில் அரை அடிக்கு சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் இவ்வழியாக, செல்லப்பனுார், கெம்பனுார், மாதப்பனுார், கெண்டேபாளையம் ஆகிய கிராமங்களுக்கு, பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், அவ்வப்போது சேற்றில் சிக்கி தடுமாறி விழுகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடனடியாக, சாலையில் இருக்கும் சேற்றை அகற்றி, தார் சாலை அமைக்கும்படி, மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜன், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE