லண்டன்:கொரோனா வைரஸ் பரவல் துவங்கி, ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, 90 வயது மார்க்கரெட் கென்னானுக்கு, உலகின் முதல் தடுப்பூசி அளிக்கப்பட்டது.
பிரிட்டனைச் சேர்ந்த, இந்திய வம்சாவளி தம்பதிக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு இறுதியில், சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. மருந்தோ, தடுப்பூசியோ இல்லாததால், தொடர்ந்து அதன் தாக்கம், உலகின் பல நாடுகளில் இன்றும் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'பைசர்' மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்த, பிரிட்டன் மற்றும் பஹ்ரைன் நாடுகள் அனுமதி அளித்துள்ளன.
அதன்படி, உலகிலேயே முதல் முறையாக, பிரிட்டனில் இந்த தடுப்பூசி அளிக்கும் பணி துவங்கி உள்ளது. தேசிய சுகாதார சேவை துறை சார்பில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பிரிட்டனின் மத்திய பகுதியில் உள்ள கோவன்ட்ரியில், பல்கலை மருத்துவமனை யில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி, 90 வயதாகும், மார்க்கரெட் கென்னானுக்கு அளிக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையை சேர்ந்த, மே பார்சன்ஸ் என்ற நர்ஸ்,இந்த தடுப்பூசியை செலுத்தினார். மகன், மகள் மற்றும் நான்கு பேரக் குழந்தைகள் உள்ள கென்னான், மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார். ''இத்தனை நாளாக பயந்து பயந்து வாழ்ந்து வந்தேன். வரும் புத்தாண்டை, குடும்பத்தாருடன் இணைந்து கொண்டாடுவேன். உலகிலேயே முதல் தடுப்பூசியை பெறுவதில் பெருமைபடுகிறேன்,'' என, அவர் கூறியுள்ளார்.
அடுத்த வாரத்தில், 91 வயதை நிறைவு செய்கிறார், கென்னான்.முதல்கட்டமாக, 80 வயதுக்கு மேற்பட்டோர், முதியோர் மையங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்டோருக்கு இந்த தடுப்பூசியை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஒருவருக்கு இரண்டு கட்டங்களாக தடுப்பூசி வழங்கப்படும். முதல் ஊசி செலுத்திய பின், 21வது நாளில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான பிரிட்டனின் போராட்டத்தில் மிகவும் முக்கியமான தருணத்தை எட்டியுள்ளோம். இந்த தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதை மக்களுக்கு சேர்க்கும் சுகாதாரத் துறையினர், தடுப்பூசியை பெறுவோருக்கு வாழ்த்துக்கள்.தற்போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த தடுப்பூசி வழங்கப்படும். அனைத்து தரப்பினருக்கும் வழங்கும்வரை, தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
முதல்கட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்குவது தொடர்பாக, நாட்டில் உள்ள முதியோர்களுடன், அரசு தரப்பில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நியூகேசில் பகுதியில் வசிக்கும், இந்தியாவை பூர்வீகமாக உடைய, 87 வயதாகும், ஹரி சுக்லாவுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அவரது மனைவி ரஞ்சனுக்கும், 83, தடுப்பூசி அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி பெறும், முதல் இந்திய வம்சாவளி தம்பதி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE