கடலுார்:கடலுார் மாவட்டத்தில், புயல், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதல்வர், இ.பி.எஸ்., இரண்டாவது முறையாக பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.
'நிவர்' புயலால், கடந்த மாதம், 24ம் தேதி துவங்கி, 26 வரை கொட்டிய கனமழையால், கடலுார் மாவட்டம் வெள்ளக்காடானது. 26ம் தேதியே, பாதிப்புகளை முதல்வர் இ.பி.எஸ்., நேரில் பார்வையிட்டார்.'நிவர்' புயல் பாதிப்பு தீரும் முன்பே, 'புரெவி' புயல் உருவாகி, கனமழை கொட்டியது. 1.50 லட்சம் ஏக்கர் அளவில் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. 500க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்ததை அறிந்த முதல்வர், அமைச்சர்கள் சம்பத், சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோரை அனுப்பி, நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.முதல்வர், இ.பி.எஸ்., இரண்டாவது முறையாக, மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பகல், 2:00 மணிக்கு, கடலுார் சுற்றுலா மாளிகை வந்தார். அங்கிருந்து, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அனுகம்பட்டு கிராமத்திற்கு சென்று, வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் வயலை பார்வையிட்டார்.
வேட்டியை மடித்துக்கட்டி, வயலில் இறங்கி, தண்ணீருக்கடியில் அழுகிய நெற் பயிரை எடுத்து பார்த்தார். அங்கிருந்த விவசாயிகளிடம், எத்தனை நாட்களாக மூழ்கியுள்ளது உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். அங்கிருந்து ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, முட்லுார், ஒரத்துார், சேத்தியாத்தோப்பு வழியாக வீராணம் ஏரிக்குச் சென்றார்.வழியில், மழை பாதித்த வயல்கள் மற்றும் சேதமான சாலைகளை பார்வையிட்டார்.
வீராணம் ஏரிக்குச் சென்ற அவர், கந்தகுமரன் என்ற இடத்தில் உள்ள ஏரியின் ஜீரோ பாயின்ட் பகுதியில் இறங்கி சென்று, தண்ணீர் அளவுகோலை பார்வையிட்டார். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், தண்ணீர் வெளியேற்ற உத்தரவிட்டார்.தொடர்ந்து, வெள்ளத்தால் தத்தளிக்கும் திருநாரையூர் கிராமத்தை பார்வையிட்டார். இப்பகுதி வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வுக்கு வழி ஏற்படுத்த, அதிகாரிகளிடம் விபரம் கேட்டார்.
தொடர்ந்து, சிதம்பரம் சென்றவர், இளமையாக்கினார் கோவிலில் இடிந்து விழுந்த குளத்தின் மதில் சுவரையும், அப்பகுதியில் சாலை உள்வாங்கியதையும் பார்த்தார்.அங்கிருந்து வல்லம்படுகை கிராமத்திற்குச் சென்று, புயலால் பாதித்த நபர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாமில் சிகிச்சை விபரங்களை கேட்டு, பொது மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.அங்கிருந்து இரவு, 7:00 மணியளவில், நாகை மாவட்டம் புறப்பட்டுச் சென்றார்.
உரிய இழப்பீடு: முதல்வர் உறுதி
சிதம்பரம், வல்லம்படுகையில் முதல்வர்,
இ.பி.எஸ்., அளித்த பேட்டி:கனமழையால் பாதித்த விவசாய நிலங்களை கணக்கிட்டு,
அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு அறிக்கை
கிடைத்தவுடன், விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கும்.மத்திய அரசை
கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. அந்த
குழுவினர், தமிழகம் முழுதும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை
பார்வையிட்டனர்.
இருந்தாலும் 'புரெவி' புயல் மழையாலும், கடலுார் உட்பட பல
மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதையும் அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
பேரிடர் நிதி என, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு கொடுக்கிறது. அதில்
இருந்து தான் செலவு செய்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, மத்திய
அரசிடம் இருந்து இரண்டாவது நிதி வந்துள்ளது. அதிக இழப்பீடு
ஏற்பட்டுள்ளதால், அதிக நிதி கேட்டுள்ளோம். அந்த இழப்பீட்டை கணக்கெடுக்கத்
தான், மத்திய குழு பார்வையிட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE