உடுமலை:உடுமலை நகர வீதிகளில், நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதில், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.உடுமலை, நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில், நகர வணிக வீதிகளிலும், குடியிருப்புகள் உள்ளன. மேலும், பசுபதி வீதி, சரவணா வீதி, வ.உ.சி.,வீதிகளில் மருத்துவமனை மற்றும் கடைகள் இருப்பதால், நாள்தோறும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையிலும், உடுமலை நகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. காந்திசவுக் பகுதி போன்ற குடியிருப்பு பகுதிகளில், சாக்கடை கால்வாய்கள் தொடர்ந்து தேங்கி, வீடுகளின் முன்பு வரை கழிவுநீர் குளமாக தேங்கும் அவலங்கள் தொடர்கிறது.வணிக வீதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் பகுதிகளிலும், சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மழைநீரில் கழிவுகள் தேங்கி, கொசுப்புழு உற்பத்தியை அதிகரிக்கிறது.புகைமருந்து அடிப்பதற்கான கருவிகள் இருந்தும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், நகர மக்கள் எளிதில் நோய்பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்.தற்போது, நகரின் சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புகளும் கேள்விக்குறியாவதால், கொரோனா அச்சத்தோடு, இப்பிரச்னைகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE