உடுமலை:பாலிடெக்னிக் படிப்பில் விருப்பமுள்ள மாணவர்கள், தொலைதுாரம் சென்று படிக்க வேண்டிய நிலையை மாற்ற, உடுமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை சுற்றுபகுதியில் ஒரு தனியார் கலை அறிவியல் கல்லுாரி, ஒரு அரசுக் கலைக் கல்லுாரி மற்றும் ஒரு அரசு உதவி பெறும் கல்லுாரி உள்ளது. பிளஸ் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெறும் உடுமலை மாணவர்களுக்கு இம்மூன்று கல்லுாரிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது.பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இரண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மட்டுமே உள்ளது.பாலிடெக்னிக் படிக்க விரும்பும் ஏழை மாணவர்கள் கோவை மற்றும் தொலைதுார பகுதிகளுக்கு சென்றே படிக்க வேண்டியுள்ளது.வளர்ந்தும் வரும் தொழிற்சாலைகள், கல்வித் தரத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளோடு, கல்வி மாவட்டமாகவும் மேம்படுத்தப்பட்டு, உடுமலை வளர்ச்சி அடைந்து வருகிறது.கோவை மற்றும் திருப்பூர், உடுமலை சுற்றுப்பகுதிகளிலும் மெக்கானிக்கல், உள்ளிட்ட பல்வேறு துறை தொடர்பான தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், உடுமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அமைவது நீண்ட நாள் கனவாகவே உள்ளது.கல்வியாண்டுதோறும், 44 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து, ஐந்தாயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்து வெளியேறுகின்றனர். தொழிற்பயிற்சி பெற, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.ஆனால், தொழிற்சார்கல்வியில் பட்டம் பெறும் கனவோடு பள்ளிபடிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, தொழிற்பயிற்சி பெறுவதற்கு மட்டுமே வாய்ப்பு அமைவது, அவர்களின் கனவுகளையும் சீர்குலைத்துவிடுகிறது. உடுமலை கல்வி மாவட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பாலிடெனிக் அமைக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE