பொள்ளாச்சி:''காலதாமதம் செய்யாமல், பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஜன., மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்; பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 170.22 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது.
கடந்த, 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டம் இன்னும் முழுமை பெறாமல், இழுபறியாக ஆமை வேகத்தில் நடக்கிறது.பணிகள் முடிப்பதற்கு முன்பே, பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. தோண்டப்பட்ட ரோடுகளும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன.நகராட்சியில் நடக்கும், ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், டிச., மாதத்துக்குள் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்படும், என, தெரிவித்தனர். ஆனால், இன்னும் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.நகரத்தில் ஆய்வுஇந்நிலையில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, நேற்று பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். மாட்டு சந்தையில் நடக்கும் சுத்திகரிப்பு நிலைய பணிகளை பார்வையிட்டார். சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல், நகராட்சி பொறியாளர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.மாவட்ட கலெக்டர், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் எந்தளவில் உள்ளது என்ற விபரங்களை கேட்டறிந்தார். அப்போது, ''பணிகள் முடிவதற்கு முன்பே, ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. கட்டும் போதே நல்ல முறையில் கட்ட வேண்டாமா; ஆள் இறங்கும் குழிகள் சேதத்துக்கான காரணமென்ன, ரோடுகள் இன்னும் ஏன் சீரமைக்கவில்லை,'' என, கலெக்டர் அடுக்கடுக்கான கேள்விகளை கோபமாக கேட்டார்.சப்பைக்கட்டுஅதற்கு நகராட்சி அதிகாரிகள், '300க்கும் மேற்பட்ட ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை மாற்றி அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்திடம் தெரிவித்துள்ளோம்,' என்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'சேதமடைந்த ஆள் இறங்கும் குழிகளை சீரமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என, தெரிவித்தனர். அதற்கு கலெக்டர், 'வழக்கமான பதிலேயே கூறாமல், ஜன., மாதத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; காலதாமதம் செய்ய கூடாது; ஆள் இறங்கும் குழிகளை முறையாக சீரமைக்கணும்,' என, அறிவுறுத்தினார்.கிராமங்களில் ஆய்வுபொள்ளாச்சி ஆ.சங்கம்பாளையம் சமுதாய நலக்கூடம், அனுப்பர்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஏரிப்பட்டியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் திட்ட பணி, பூசாரிப்பட்டியில் தடுப்பணை, நல்லாம்பள்ளி தார்ரோடு பணிகள், பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு மேம்பாலப்பணிகளை பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார்.உறுதி கூறிய கலெக்டர்!ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறியதாவது:பொள்ளாச்சி கிராமங்களில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில், குடிநீர் வீடுகளுக்கே வழங்கும் பணி, 228 கிராமங்களுக்கு, 76 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், 400 தடுப்பணைகள் கட்டப்படுகிறது.
இதற்கு, ஐந்து லட்சம் முதல், 50 லட்சம் வரை பணம் ஒதுக்கப்படுகிறது. பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ஜன., மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, சோதனை ஓட்டம் நடத்த வேண்டும்; ஜன., இறுதிக்குள் திட்டம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டம் நடத்தி பணிகள் குறித்து கேட்டறியப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE