உடுமலை;பெதப்பம்பட்டி நால்ரோட்டில், விபத்துகளை குறைக்க, சென்டர்மீடியன் மற்றும் 'பஸ் பே' அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலைத்துறையால், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொள்ளாச்சி-தாராபுரம், உடுமலை-செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும், நால்ரோடு சந்திப்பு, பெதப்பம்பட்டியில், அமைந்துள்ளது. பொள்ளாச்சி-பெதப்பம்பட்டி, தாராபுரம், கரூர் உட்பட வழித்தடங்கள், உடுமலை-செஞ்சேரிமலை மற்றும் கிராம வழித்தட பஸ்கள் நால்ரோட்டில், நிறுத்தப்படுகின்றன.இதனால், சந்திப்பு பகுதியில், நெரிசல் நிரந்தரமாக இருக்கும். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், மாநில நெடுஞ்சாலையில், சோமவாரப்பட்டி முதல் பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை, ரோடு விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. அப்போது, அகற்றப்பட்ட சென்டர் மீடியன், குறிப்பிட்ட பகுதியில், மட்டும், மீண்டும் அமைக்கப்பட்டது.தற்போது, ஒன்றிய அலுவலகம் முதல் அரசுப்பள்ளி வரை, 500 மீ., தொலைவுக்கு சென்டர்மீடியன் அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு புறங்களிலும், ரோடு விரிவாக்கப்பட்டு, சென்டர்மீடியன் அமைப்பதால், நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. அதே போல், பொள்ளாச்சி வழித்தட பஸ்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால், தாராபுரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விலகி செல்ல முடியாமல், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பஸ்கள் நிறுத்தப்படும் இடம் அருகே இருந்த நிரந்தர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அங்கு, ஒன்றிய நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிழற்கூரை முன்பு, தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பஸ்களை நிறுத்த முடிவதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாக, நிழற்கூரை முன்பு, பஸ்கள் நிறுத்தும் வகையில், தடுப்புகள் வைத்து, 'பஸ் பே' அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர், திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE